நூல் அறிமுகம் :: ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை.
ஆசிரியர் அறிமுகம்:
பள்ளி மற்றும் கல்லூரி வகுப்பு முழுவதும் தமிழ் வழியில் படித்த ஒருவர் ஐஏஎஸ் ஆக முடியுமா? ஒரு வேளை முயற்சி செய்தால் ஆகலாம். ஆனால், அந்த ஐஏஎஸ் -யும் தமிழிலேயே எழுதி தேர்ச்சி பெற முடியுமா? ஆம், இவையெல்லாம் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே நடந்தது என்றால் நம்ப முடியுமா!!! இதையெல்லாம் 2019 ஆண்டு போட்டித்தேர்வுக்குப் படிக்கும்போது ஒன்பதாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் "மலை இடப்பெயர்வுகள்: ஓர் ஆய்வு" என்னும் பாடப்பகுதியில் நான் படித்து வியந்தது. இத்தகைய சாதனைக்கெல்லாம் உரியவர் சிந்துவெளி மற்றும் சங்க இலக்கிய ஆய்வாளரான ஐயா, ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களே. அன்று முதல் ஐயாவை முகநூலிலும் யூட்யூபிலும் பின் தொடர்ந்து வருகிறேன்.
2019 ஆண்டு இறுதியில் Journey of Civilization: Indus to Vaigai என்னும் இந்நூலின் மூல வடிவம் வெளியானது. தமிழில் வெளிவந்தால் எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதேபோல் தமிழிலும் முதல்வரின் கையால் வெளியானது. ஆனால், விழா சென்னையில் நடைபெற்றதால் வாங்க முடியவில்லை. ஏற்கனவே, ஐயாவின் "தமிழ் நெடுஞ்சாலை" என்னும் புத்தகம் திருச்சியில் வெளியானது. வெளியீட்டு நாள் அன்றே அதை வாங்கி இருந்தேன். அதேபோல் இந்த நூலும் வெளியாகும் என்று எதிர்பார்த்து இருந்தேன்.2023 ஆண்டு ஜூன் மாதம் திருச்சியில் வெளியிடப்பட்டது. விழாவிலும் கலந்து கொண்டு அன்றே இந்தப் புத்தகத்தையும் வாங்கிவிட்டேன். ஆனால், அதன் அளவும் அப்பொழுது இருந்த தேர்வு சுமையும் உடனே படிக்க முடியாமல் போய்விட்டது. ஒரு வழியாக இப்பொழுதுதான் படித்து முடித்தேன். படித்தேன் என்பதை விட அதோடு வாழ்ந்தேன் என்றே கூற வேண்டும்.
நூல் அறிமுகம்:
" மக்களின் வரலாறே வரலாறு, மற்றதெல்லாம் வாய்க்கால் தகராறு" என்று இந்நூலாசிரியர் கூறுவார். அதுபோல, ஒரு சமூகத்தின் இருப்பே அம்மக்களின் வரலாற்றைக் கொண்டே கட்டம்மைக்கபடுகிது. பன்னெடுங்காலமாக மனிதன் தன் இருப்பை தக்க வைத்துக்கொள்ள தொடர்ந்து புலம்பெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள். புலம்பெயர்ந்தவர்கள் நினைவுகளை மட்டும் சுமக்காமல் நிலப்பெயர்களையும் சேர்த்தே சுமக்கிறார்கள். அப்பெயர்களினுடாக தம் பழைய நினைவுகளை மீட்டுருவாக்கம் செய்து கொள்கின்றனர்.
சிந்து முதல் வைகை வரை வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் உள்ள பல்வேறு இடப்பெயர்கள் சங்க இலக்கியம் காட்டும் இடங்களுடன் ஒத்துப்போவதை ஆசிரியர் அழுத்தம் திருத்தமாக விளக்கியுள்ளார். இடப்பெயர்களை வெறும் ஒப்பீட்டு அளவில் கூறிச்செல்லாமல் சங்க இலக்கியத்தோடு காட்சிப்படுத்தவும் செய்கிறார்
பானைத்தடம், திராவிட குஜராத், திராவிட மகாராஷ்டிரா, வன்னி மரம் என்று பல்வேறு தலைப்புகளில் சிந்துவெளி பண்பாட்டிற்கான திராவிட கருதுகோளை நிறுவியுள்ளார். இவை அனைத்தையும் வெறும் வார்த்தைகளால் மட்டுமல்லாமல் தரவுகளால் கட்டமைத்ததே இந்நூலின் சிறப்பு.
வரலாறு என்பது தரவுகளின் மூலம் கட்டமைக்கப்பட்ட வேண்டும் என்பதை நூல் முழுமைக்கும் கடைபிடித்து வந்துள்ளார். நிலவியல் வரைபடங்கள், கள ஆய்வுகள் என்று பலவகைகளில் தரவுகளை நிறுவியுள்ளார்.
எலும்பு தின்னும் ஒட்டகம், சுமை தூக்கும் 'அத்திரி' என்னும் கழுதையை சுறா மீன் கடித்த நிகழ்வு என ஆச்சர்யமூட்டும் பல தகவல்களை தந்துள்ளார். சங்க இலக்கியத்தின் ஆழ அகலமும், இந்திய துணைக்கண்டத்தின் குறுக்கும் நெடுக்குமாக ஆய்ந்தறிந்த ஒருவரால் மட்டுமே இத்தகையதொரு நூலைப் படைக்க முடியும். அதையே இந்நூலாசிரியர் படைத்துள்ளார்.
இறுதியாக,"சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே" என்னும் நூலாசிரியரின் கூற்றை தனது நூலின் மூலம் உறுதிபட நிறுவி இருக்கிறார்.
இந்திய துணைக்கண்டத்தின் வரலாற்றை ஆராய முற்படும் எவரும் இந்த நூலை கருத்தில் கொள்ளாமல் ஆய்வு செய்ய முடியாது என்பது திண்ணம்.
நூல்: ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை.
ஆசிரியர்: ஆர்.பாலகிருஷ்ணன்.
வகைமை: ஆய்வுநூல்
வெளியீடு: ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
Comments
Post a Comment